பேருந்து மீது அதிவேகத்தில் மோதிய லாரி.. 16 அகதிகள் உடல் நசுங்கி பலி! மெக்சிகோவில் சோகம்!

 

மெக்சிகோவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒக்ஸாகா மாகாணத்தை நோக்கி தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில், கனரக லாரி ஒன்று பேருந்தை பின்தொடர்ந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. உயிரிழந்தவர்களில் 15 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வெனிசுலாவைச் சேர்ந்தவர் என்றும் மெக்சிகோவின் தேசிய குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் 9 பேர் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா பயணிகள் அமெரிக்காவில் தஞ்சம் கோரி, CBP One திட்டத்தில் சந்திப்புகளை பெற்றுள்ளனர் என்று INM கூறியது. புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லையை அடைய லாரிகள் மற்றும் பேருந்துகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.