நைஜீரியாவில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. 6 பேர் பலியான சோகம்!

 

நைஜீரியாவில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரக்கா நாடான நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பயணிகளை ஏற்றியபடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பேருந்து மீது ரயில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை. பேருந்தில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நகரங்களில் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இது போன்ற விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. 

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசில், விபத்துக்களைத் தடுக்க சமீப ஆண்டுகளில் கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது கடுமையான பிரச்சனையாக உள்ளது.