அதிகாலையில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு

 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ‘ரிங் ஆப் பயர்’ மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 4.75 அட்சரேகையிலும் 126.38 தீர்க்க ரேகையிலும் உள்ளது. பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சரியாக இன்று அதிகாலை 2.18 மணியளவில், இந்தோனேசியாவின் தலாவத் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.

முன்னதாக ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.