இத்தாலி நகரை தாக்கிய சேறு சுனாமி.. பீதியடைந்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ!
இத்தாலியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் நதியில் கடும் வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். நகரின் நடுவே நதி ஓடுவதால் நதிக்கரையில் இருந்து பொங்கி எழுந்த சேறுடன் கூடிய தண்ணீர் நகரம் முழுவதும் பரவியது.
இதனால் நகரம் முழுவதும் சேற்றால் பூசப்பட்டது போன்று காட்சியளித்தது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பி, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என பிபிசி தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும், 120 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் வாகனங்களில் சேறு ஒட்டிக்கொண்டதால் சுத்தப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவு உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பட்டியலில் இத்தாலியின் பார்டோனேச்சியா நகரமும் இணைந்துள்ளது. பார்டோனேச்சியா நகரம் பிரான்ஸ் எல்லைக்கு அருகிலுள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.