அமெரிக்காவின் ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ.. பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு!

 

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது. மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இது கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டு தீயை விட  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், லகேனா நகரத்தின் பெரும் பகுதி குடியிருப்புகள் எரிந்து சாம்பலாயின.

தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தால் 2,200 குடியிருப்புகள் எரிந்து சாம்பலான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காட்டு தீயால் ஏற்பட்டுள்ள சேதங்களின் மொத்த மதிப்பு 6 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி) அந்நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஹவாயில் உள்ள சுற்றுலா பயணிகள், தீவிபத்துக்குள்ளான பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.