சீனாவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து.. 31 பேர் பலியான சோகம்!!
சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 31 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் டிராகன் படகு திருவிழாவுக்காக 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாட பலர், சீனாவின் வடமேற்கு பகுதியில் யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங் பார்பெக்யு உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது. இரவு நேரத்தில் சுமார் 8.40 மணிக்கு பலத்த சத்ததுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்திற்கு இடையே தீயை அணைக்க போராடி வருவதை சம்பவ இடத்து வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. விபத்து தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.