25 வயதிற்குள் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு! எங்கு தெரியுமா?

 

25 வயது அல்லது அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனையடுத்து அந்நாட்டு அரசு, சரியான வயதில் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்து வருகிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணமகள் 25 அல்லது அதற்கு குறைவான வயதுடைய சீன தம்பதிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாங்ஷன் கவுண்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1,000 யுவான் (இந்தியா பணமதிப்பில் ரூ.11,349) வெகுமதி அளிக்கப்படுகிறது. சீனாவில் சட்டப்பூர்வ திருமண வயது ஆண்களுக்கு 22 ஆகவும், பெண்களுக்கு 20 ஆகவும் உள்ளது. தற்போது சீனாவில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரங்கள் 2022-ல் திருமண விகிதம் 6.8 மில்லியனாக இருந்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் குறைவான திருமணங்கள் நடந்துள்ளன. சீனாவின் கருவுறுதல் விகிதம் உலகளவில் குறைந்துள்ளது. 2022-ல், இது 1.09 என்ற சாதனை அளவில் சரிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

குழந்தை பராமரிப்பு செலவுகள் மற்றும் பெண்களின் தொழில் முட்டுக்கட்டை பல பெண்களை குழந்தை பெறுவதை நிறுத்தியுள்ளது. சீனாவின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் பின்னணியில் அங்குள்ள இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.