உலககோப்பை கால்ப்பந்து 2022: 6,000 தொழிலாளர்களை பலியிட்ட கத்தார்!!

 

உலகக் கோப்பை நடைபெறும் கத்தாரில் இடம்பெறும் மைதான அமைப்பு பணியில் 6,000-க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தி கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

2022-ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் கடந்த 2010-ம் ஆண்டு பெற்றது. அன்று முதலே கத்தாரை பல சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டன. கத்தார் உலகக் கோப்பை நடத்த சரியான நாடு அல்ல என்று முன்னாள் ஃபிஃபா தலைவர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர். கத்தாரை விடாது துரத்தும் முக்கிய சர்ச்சைகள் குறித்துக்காணலாம்.

உலகக் கோப்பை போட்டியை நடத்த கத்தார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருப்பதாக ஃபோர்ப்ஸ் வலைத்தளம் தெரிவித்திருக்கிறது. கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக செலவு செய்யப்பட்ட தொடர் இதுதான். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யா செலவு செய்ததை விட 15 மடங்கு அதிகம். 

உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கென்றே ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியுள்ளனர். இதற்கான பணிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர். 

தொழிலாளர்களை கத்தார் நடத்தியவிதம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக அதிக நேரம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் மக்களை வேலை வாங்கியதாகக் கூறப்படுகிறது. கத்தாரின் உயர் வெப்பநிலையில் தொடர்ந்து 12 மணி நேரம் வரை மக்கள் வேலை வாங்கப்பட்டனர். இதில் 6000 பேர் வரை உயிரிழந்தனர் என்று தி கார்டியன் அறிக்கை கூறுகிறது.

கத்தார் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் இறப்பு இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டு இருப்பதையும் சர்வதேச தொழிலாளர் சங்கம் கண்டித்துள்ளது.