அமெரிக்காவில் வினோதம்... துப்பாக்கியில் துள்ளிக் குதித்த வளர்ப்பு நாய்... குண்டு வெளியேறி எஜமானர் பலி..!

 

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித் (30). இவர் பிளம்பராக வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. எனவே, கடந்த சனிக்கிழமை அன்று ஜோசப் தான் ஆசையாய் வளர்த்த நாயுடன் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.

காரின் முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் சென்ற நிலையில், பின்னிருக்கையில் வளர்ப்பு நாய் இருந்துள்ளது. வேட்டைக்கான துப்பாக்கியும் நாய்க்கு அருகே பின் இருக்கையில் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறி குதித்துள்ளது. அப்போது துப்பாக்கி சுட்டு குண்டு வெளியேறி முன் இருக்கையில் இருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது. இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். இது தெரியாமல் அந்த வளர்ப்பு நாய் அவரை சுற்றி, சுற்றி வந்துள்ளது.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கன்சாஸ் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022-ம் ஆண்டில் மட்டும் 648 துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. துப்பாக்கிச்சூடு காரணமாக 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.