இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி

 

இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர். இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், 5வது மற்றும் 2வது இறுதி சுற்று வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் 137 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றார். வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் 113 வாக்குகளுடன் 2ம் இடம் பெற்றார். பென்னி மோர்டன்ட் 105 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் பென்னி போட்டியிலிருந்து வெளியேற, இறுதியாக 2 போட்டியாளர்களாக ரிஷி சுனக், லிஸ் டிரஸ் தேர்வாகி உள்ளனர்.

இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக இறுதிகட்ட ஓட்டெடுப்பு நடத்தப்படும். அதில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.