சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக.. தனது பணத்தையே வங்கியில் கொள்ளையடித்த பெண்!!

 

லெபனானில் வங்கியில் சேமித்து வைத்த பணத்தை பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி ஒரு பெண் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் அங்குள்ள வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவசரகாலத்திற்கு சிக்கலில் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலரான சலி ஹபீஸ், தனது சகோதரியின் புற்றுநோய் சிகிச்சைக்காக பெய்ரூட் புளோம் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றுள்ளார். ஆனால், மாதத்துக்கு 200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம்) மட்டுமே எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்த ஹபீஸ், விநோதமான செயலில் ஈடுபட்டுள்ளார். வங்கியால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்களுடன் இணைந்து பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியில் உள்ள தனது சேமிப்பு தொகையான 13 ஆயிரம் டாலர் (ரூ.10.33 லட்சம்) கொள்ளையடித்துள்ளார்.


பாதுகாப்புப் படையினர் வருவதற்குள் வங்கியின் பின்பக்க ஜன்னலை உடைத்துக்கொண்டு ஹபீஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். இதனை சமூக வலைதளத்தில் நேரடியாகவும் ஹபீஸ் ஒளிபரப்பு செய்துள்ளார். வங்கியின் கட்டுப்பாட்டால் தனது தங்கைக்கு சிகிச்சை தடைபடும் என்பதால் தன் பணத்தை தானே கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.