ஓடுதளத்தில் இருந்து பறக்க இருந்த விமானம்... தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்து; 2 வீரர்கள் பலி!!
பெருவில் விமான ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து 102 பயணிகளுடன் லாட்டம் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றபோது ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது.
இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினார்கள்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.இந்த விபத்தில் தீயணைப்பு படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.