தென்கொரியா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து! 4 நோயாளிகளுடன் ஓரு நர்சு உடல் கருகி பலி!!

 

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளும், நர்சும் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 2-வது, 3-வது தளங்களில் அலுவலகங்களும், முதல் தளத்தில் ஓட்டல்களும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 10.17 மணி அளவில் 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மருத்துவமனை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 21 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 11.29 மணி அளவில் தீயை போராடி அனைத்தனர். இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு நர்சு என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.