அதிர்ச்சி! இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு!!

 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் தற்போது 162 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படும். உலகில் வேறு எந்த பகுதிகளைக் காட்டிலும் இந்த ரிங் ஆப் ஃபயர் பகுதியில் தான் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்படும். இந்நிலையில், தற்போது அங்கு மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெங்குலு என்ற பகுதியில் இருந்து தென்மேற்கே 202 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கம் காரணமாக 162 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.