அதிர்ச்சி! எகிப்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 22 பேர் பலி!!

 

எகிப்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின் வடக்கு மாகாணம் நைல் டெல்டா பகுதியில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. டகாலியா மாகாணம் ஆகா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மன்சூரியா கால்வாய்க்குள் பாய்ந்தது

இதில், கால்வாய் நீரில் பலர் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 

எஞ்சிய 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2021-ம் ஆண்டில் , உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் சாலைகளில் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை மாதம், மத்திய எகிப்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.