அமெரிக்காவில் பரபரப்பு! பல்கலைக்கழக மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!!

 

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட அமெரிக்காவில் சமீப காலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, அங்குத் துப்பாக்கிகளை வாங்கவும் அதை வைத்திருக்கவும் கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை. இதுவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்த தகவலை விர்ஜீனியா பல்கலைக்கழக போலீசார் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என விர்ஜீனியா பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சந்தேகிக்கப்படும் குற்றவாளியான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.