நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி..!

 

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான். உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள்  இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52.02 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

அவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.