நிலநடுக்கத்தில் காணாமல் போனவர் 17 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!! சீனாவில் நடந்த அதியசம்!

 

சீனாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாள்களாக காணாமல்போனவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக பதிவாகி இருக்கிறது.நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் ஊடங்கள் தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலநடுக்கத்தால், கன்சே திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு  சிச்சுவானில் ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பாதுகாப்புக் கருதி நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் காணாமல் போனவர்களை தேடும் பணியும், மீட்புப்பணியும் தொய்வடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், நிலநடுக்கத்தில் 17 நாட்களுக்கு முன் காணாமல் போன 28 வயதான கான் யூ என்பர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்மின் நிலைய ஊழியரான கான் யூ சம்பவத்தன்று சக ஊழியரான லுவோ யோங்குடன் தங்கியிருந்தார். அப்போது, நிலநடுக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவரும் வேறு இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு நாள் முழுவதும் உணவு மற்றும் மொபைல் சிக்னல் இல்லாமல் இருந்தவர்கள் பின்னர் அங்கிருந்து செப்டம்பர் 7-ம் தேதி வெளியேறி 12 மைல்களுக்கு மேல் நடந்துள்ளனர்.

எனினும், நிலநடுக்கத்தில் தன் கண்ணாடிகளை இழந்த குறைந்த பார்வை திறன் கொண்ட கான், மலைப்பாங்கான இடத்தில் நடப்பது கடினமாக இருந்துள்ளது. இதனால் லுவோ, கானை ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு, மீட்டு படையினரை அழைத்து வர சென்றுள்ளார். இதையடுத்து மீட்பு படையினரை அடைந்த லுவோ, கானை அழைத்து வர தேவையான உதவிகளுடன் விட்டுச்சென்ற இடத்துக்கு மீண்டும் சென்று பார்த்தப்போது அவர் அங்கு இல்லை. 

பின்னர், கடந்த 17 நாட்களாக மீட்புப் படையினர், மலைப்பகுதியை நன்கு அறிந்த ஒருவர் மூலம் கானின் கால்தடங்கள் மற்றும் ஆடைகளை வைத்து தேடி கண்டுபிடித்துள்ளனர். 17 நாட்களும் காட்டுப் பழங்களை உண்டும், தண்ணீர் குடித்தும் உயிர் பிழைத்ததாக கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பல எலும்பு முறிவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையொட்டி அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கானின் பெற்றொருடன் அனைவரையுமே நெகிழ வைத்துள்ளது.