வீட்டிலேயே சிறிய ரக விமானம் தயாரிப்பு.. குடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்!!

 

இங்கிலாந்தில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிலேயே குட்டி விமானம் தயாரித்து அசதித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் அலிசேரில் தமரக் ஷன் (38). முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்காக, 2006-ம் ஆண்டு லண்டன் சென்ற இவர், தற்போது 'போர்டு' கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று இவர், விமானிக்கான உரிமம் வைத்து உள்ளார். மேலும்,  அவ்வப்போது தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் பறப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் போது, வீட்டில் இருந்தே 4 பேர் அமரந்து செல்ல கூடிய குட்டி விமானத்தை உருவாக்கினார்.

இந்த விமானத்துக்கு தனது இரண்டாவது மகளின் பெயரான தியாவுடன் ‘ஜி தியா’ என பெயரிட்டுள்ளார். இந்த விமானத்தில், ஜெர்மனி, ஆஸ்திரியா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.

இது குறித்து அசோக் கூறுகையில், லண்டனில் 4 பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய விமானங்கள் வாடகைக்கு கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் மிக பழைய மாடலாக இருக்கிறது. அதனால் தான் சுயமாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். அதன்படி ‘ஸ்லிங் ஏர்கிராப்ட்’ என்ற விமானம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்று குட்டி விமானம் செய்வதற்கான உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே தயாரித்தேன். இதற்கு ரூ. 1.80 கோடி செலவானது. கொரோனா ஊரடங்கின் போது நேரமும், பணமும் மிச்சமானதால் இதை செய்ய முடிந்தது என கூறினார்.

இந்த குட்டி விமானத்தை உருவாக்கிய அசோக் அலிசேரில் தமரக் ஷன் கேரள மாநில முன்னாள் எம்.எல்.ஏ., தமரக் ஷன்னின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.