சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து: 3 பேர் பலி, 6 பேர் காயம்

 

சீனாவில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம், அன்ஃபு கவுண்டியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த நபர் லியு (48) என்றும், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெய்ஜிங் டெய்லி பகிர்ந்த வீடியோவில், ஒரு போலீஸ் அதிகாரி தனது கைகளில் ஒரு குழந்தையை ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம். கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது விவரம் வெளியிடப்படவில்லை.

சமீப ஆண்டுகளில் சீனாவில் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டில், சோங்கிங் நகரில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். 2020-ம் ஆண்டில், குவாங்சி பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஒன்றில், பள்ளி காவலர் ஒருவர் 39 குழந்தைகள் மற்றும் ஊழியர்களை கத்தியால் குத்தினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் தெற்கு குவாங்சி தன்னாட்சிப் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 16 குழந்தைகள் மற்றும் இரண்டு நர்சரி ஆசிரியர்கள் காயமடைந்தனர்.