அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அர்ஜெண்டினா துணை அதிபர்!! கொலையாளியின் காதலி கைது!

 

அர்ஜெண்டினாவின் துணை அதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற நபரின் காதலியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் டி கிரிச்னர். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பான கடந்த வியாழக்கிழமை கிறிஸ்டினா நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின் புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு கிறிஸ்டினா வந்தார்.

அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கிறிஸ்டினாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அப்போது, அந்த கூட்டத்திற்குள் திடீரென புகுந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கிறிஸ்டினாவை சுட்டுக்கொல்ல முயற்சித்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக கிறிஸ்டினா இந்த கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பித்தார். துப்பாக்கியில் குண்டு இருந்தபோதும் அதிர்ஷ்டவசமாக தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் கிறிஸ்டினா மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் பிரேசிலை சேர்ந்த சபக் மொண்டியல் (35) என்பதும் அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அர்ஜெண்டினாவில் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. சபக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், துணை அதிபர் கிறிஸ்டினாவை சுட்டுக்கொல்ல முயற்சித்த சபக் மொண்டியலின் காதலி பிரண்டா உலியர்டி (23) என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். கிறிஸ்டினாவை கொலை செய்ய முயற்சித்த சபக்கிற்கு அவரது காதலில் பிரண்டா உதவினாரா? இந்த கொலை முயற்சியில் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.