சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 36 உடல் கருகி பலி!!

 

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வென்ஹாங் மாவட்டத்தில் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ரசாயனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது.

ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 36 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேரை காணவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் முறையான அனுமதியில்லாமல் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பு மைவக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்ற ஆபத்தான ரசாயனப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் அரசு அதிகாரிகள், போலீசாரின் உதவியோடு முழு ஆய்வை நடத்தி, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.