பிரிட்டன் மன்னராக பதவி ஏற்றார் சார்லஸ்!!

 
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், நேற்று முன்தினம் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ், இன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக பொறுப்பேற்றார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார். பின்னர் அவர் காரில் பக்கிம்காம் அரண்மனை சென்றார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிம்காம் அரண்மனைக்கு திரும்பி உள்ளார்.
புதிய மன்னரை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். இங்கிலாந்து தேசிய கீதம் பாடி அவருக்கு வரவேற்பு கொடுத்து ராணியின் மறைவுக்கு ஆறுதலும் கூறினார்கள். சார்லசுக்கு சிலர் கைகளில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் அன்பை கண்டு சார்லஸ் நெகிழ்ந்து போனார்.
இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.
மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதேபோல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும்.
அதே சமயம் பழைய கரன்சியும் புழக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணியை குறிக்கும் வகையில் அவள் என்ற வார்த்தை நீக்கப்பட்டு சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.