அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த காற்றாலை!! வைரல் வீடியோ

 

அமெரிக்காவில் மின்னல் தாக்கி காற்றலை தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குரோவெல் நகர் அருகே பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், காற்றாலை மீது திடீரென மின்னல் தாக்கியதால், தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதன் இறக்கையில் தீப்பிடித்தபோதும், தொடர்ந்து சுழன்று கரும்புகை பரவியது.

இதனை நெடுஞ்சாலை வழியே சென்றவர்கள் தங்களது கேமிராவில் படம் பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 லட்சத்திற்கும் கூடுதலானோர் அதனை பார்வையிட்டு உள்ளனர். தீப்பிடித்ததும், நிற்காமல் சுழன்றதில், ஓர் இறக்கையில் இருந்து தீ, மற்ற இறக்கைகளுக்கும் பரவியுள்ளது. அதன்பின்னர் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குரோவெல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு துறையின் தலைவர் பெர்ரி ஷா கூறுகையில், அதுபோன்ற தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதற்கு போதிய வசதிகள் எங்களிடம் இல்லை என கூறியுள்ளார்.


இதனால், தீ அதுவாகவே அணைவதற்கு தீயணைப்பு வீரர்கள் விட்டு விட்டனர். இதுபோன்ற சூழலில் தீயை அணைக்கு முயற்சிப்பது பாதுகாப்பானது அல்ல என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.