ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்!

 

பாகிஸ்தானில் வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பத்கேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திட்டு தப்பிச்சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண தகராறே இந்த கொடூர கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கொலையாளிகளை கைது செய்ய மாவட்டத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் சீல் வைக்கப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு காபந்து முதல்வர் முகமது ஆசம் கான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்” என்று கூறினார்.