ஒரு கொலையை மறைக்க 12 குழந்தைகள் உள்பட 76 பேர் கொலை.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

 

தென்னாப்பிரிக்காவில் ஒரு கொலையை மறைப்பதற்காக தீ விபத்தை ஏற்படுத்தி 76 பேரின் உயிரிழக்க காரணமான நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்தனர். மேலும், 120 பேர் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 29 வயதான வாலிபர் ஒருவர் அந்த கட்டிடத்தில் வசித்து வந்துள்ளார். அவர் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து உள்ளூரில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவ்வாறு வியாபாரம் செய்து வந்ததில் அவருக்கும், மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த நபரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போதைப் பொருள் வியாபாரி அந்த நபரின் உடலை மறைப்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது காற்று அதிகமாக வீசியதால், தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் தான் 76 பேர் உயிரிழந்ததோடு, 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அந்த நபரை நேற்று கைது செய்து விசாரித்த போது, இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை வெளியிட போலீசார் மறுத்துள்ளனர்.

உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு அவர் யார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 76 பேரை கொலை செய்தது, 120-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.