ஹாலிவுட் படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை... பெற்றோருக்கும் தண்டனை!! வடகொரிய அடாவடி

 

வடகொரியாவில் சிறுவர்கள் ஹாலிவுட் படங்கள் மற்றும் தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. துக்கம் அனுசரிக்கப்பட்ட 11 நாட்கள், பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

வடகொரியா தனக்கு என்று தனி கொள்கையில் அடிப்படையில் செயல்பட்டு வரும் நிலையில், முக்கியமாக இதர நாட்டு கலாச்சாரங்கள் நாட்டிற்குள் வராமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர். அப்படி தற்போது ஹாலிவுட் படங்களைச் சிறுவர்கள் பார்க்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மீறினால் சிறுவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே போல், படங்களைப் பார்க்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதம் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் பெற்றோர்களுக்குக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிறுவர்களை கலாச்சார வழியில் வளர்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது என்று சில செய்தி நிறுவனங்களால் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தென் கொரியாவின் படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், பாடல்களை கேட்பதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.