தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்.. பெற்றோர் மீது பாய்ந்த நடவடிக்கை!

 

அமெரிக்காவில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 4 வயது சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் வெஸ்ட்மோர் கவுண்டி ஆளுகைக்கு கீழ் ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஜூலை 6-ம் தேதி 4 வயது சிறுவன் ரோனி லின் என்பவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அப்போது, சிறுவனை மீட்ட பெற்றோர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சிறுவன் தற்போது கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் பெற்றோர்களான லாரா ஸ்டீல் மற்றும் மைக்கேல் லின் ஆகியோர் அஜாக்கிரதையாக செயல்பட்டு சிறுவனுக்கு ஆபத்தை விளைவித்தது தெரியவந்துள்ளது.

அதாவது, இருவரும் குழந்தை கையாளும் வகையில் துப்பாக்கியை கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் அதனை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாவட்ட வழக்கறிஞர் நிக்கோல் ஜிக்கரெல்லி, “இந்த சோகமான சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெற்றோர்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.