ஆற்றில் மூழ்கி இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி.. ரஷ்யாவில் சோகம்!

 

ரஷ்யாவில் ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் மருத்துவ கல்வி படிப்பில் ரஷ்யா 8-வது இடத்தை பெற்று திகழ்கிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா கடைபிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா விருப்பமான தேர்வுகளில் முதன்மையாக உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் நடந்துள்ளது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். உயிரிழந்த  இந்திய  மாணவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ்  பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப்  ஆகிய 4 மாணவர்களும் ரஷ்யாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது. ஒரு மாணவி மற்றும் 3 மாணவர்கள் என  4 பேரும் குளிக்க சென்றுள்ளனர். 

அப்போது  மாணவி ஆற்றில் சிக்கியதால், ஏனைய மாணவர்கள் மீட்பதற்கு இறங்கியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 4 பேரும்  ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இருவரின் உடல்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 இந்திய மாணவர்களில் இஷான் அஷ்பக் பிஞ்சாரியும் ஒருவர். அவரும் மற்ற மூவரும் ஆற்றில் மூழ்கியபோது பெற்றோருடன் வீடியோ அழைப்பில் இருந்ததாக குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உயிரிழந்த மாணவர் ஆற்றில் இறங்கிய போது பெற்றோர் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாகவும் பெற்றோர் வார்த்தையை மீறி மாணவர் ஆற்றில் இறங்கி உயிரிழந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.