சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி... அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்!

 

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் சீன புத்தாண்டு நடன நிகழ்வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள் வடக்கு கலிபோர்னியா மற்றும் அயோவாவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 72 வயதான ஹூ கேன் டிரான் என அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர், போலீசாரால் சூழப்பட்டபோது தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பல மணி நேரத்துக்கு பிறகு அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.