பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 25 பேர் பலி.. திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சோகம்!!

 

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு சர்-இ-புல் மாகாணம் சயத் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் நேற்று அண்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மினி பேருந்தில் சென்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் அனைவரும் சயத் மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக புதன்கிழமை காலை, மத்திய பாமியான் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர்களின் கவனக்குறைவால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது