இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்.. 2 சிறுவர்கள் பலி.. 9 பேர் காயம்

 

இங்கிலாந்தில் நடன வகுப்பில் நுழைந்து நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. 17 வயது சிறுவன் திடீரென நடன வகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறார்களை கத்தியால் குத்தியுள்ளான். இந்த தாக்குதலில்  2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில், 9 பேர் காயம் அடைந்தனர். 

இவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த சிறுவர்கள் 7-11 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  கத்தியால்  குத்திய  17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கத்தி குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாத தாக்குதல் இது இல்லை என்ற இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். எனினும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து குற்றவாளியிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடன வகுப்பில் சிறுவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்வம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியான சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து அரச குடும்பம், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.