மதம், அரசியல் இல்லாமல் திரண்ட இரண்டரை லட்சம் தமிழர்கள்! கார்த்திகேய சிவசேனாபதி பெருமிதம்!!

 

கனடா நாட்டின் ட்ரோண்டோ நகரில் நடைபெற்ற 9வது தமிழ்த் திருவிழாவில், தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் பங்கேற்றுப் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, “ உலகத்திலேயே அரசியல் மற்றும் மதசார்பு இல்லாமல் இரண்டரை லட்சம் தமிழர்கள் ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தமிழ், தமிழர்கள், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் என்ற அடிப்படையில் மட்டுமே இங்கே தமிழர்கள் ஒன்று திரண்டு வந்திருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, கனேடியன் தமிழ் காங்கிரஸ் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொப்புள் கொடி உறவுகளான தமிழீழத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து கனடாவில் வாழக்கூடிய சகோதரர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மற்றும் டொரன்டோ மேயர் ஒலிவிய சோ, துணை மேயர்  ஜெனிஃபர் மெக்கெல்வி, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென்,  ஓண்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் க்ரஹாம் மெக்க்ரெனர் , லோகன் கணபதி, மல்லிகா வில்சன் , ஜோசுவா மரியம்பிள்ளை,  ஒண்டாரியோ துணை அட்டர்னி ஜெனரல் சங்கர் நல்லதம்பி, மற்றும் நவ தில்சன், திருகுமரன்,  சாம் அசோகன், டேவிட் பூபாலபிள்ளை, சிவா இளங்கோ, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பங்கு பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கின்றது

அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பாக, தமிழ்நாடு அரசின் சார்பாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் அயலகத் தமிழர் வாரியத்தை உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கி இருக்கிறார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தமிழ்நாட்டு அரசுடன் ஒன்றிணைக்கும் ஒப்பற்றப் பணியை அயலகத் தமிழர் நல வாரியம் செய்து கொண்டிருக்கிறது.

தமிழர்களாக ஒன்று கூடி மொழி ,கலாச்சாரம் கல்வி, சுற்றுச்சூழல், பொருளாதாரம் முன்னேற்றம் ஆகியவற்றில் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும் அடுத்த 150 வருடங்களுக்கு இந்த தலைமுறை சிந்திக்க வேண்டும்.

தொப்புள் கொடி உறவு என உலகெங்கும் உள்ள தமிழர்களை இணைக்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்வு . இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் என்ற முறையில் அழைத்ததற்கு கனடிய தமிழ் காங்கிரசிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தமிழ்நாடு அரசின் சார்பாகவும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறினார்.

9வது ஆண்டுகளாக ட்ரோண்டோவில் நடைபெற்று வரும் இந்த தமிழ்த் திருவிழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதியாக ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வரும் காலங்களில்  இந்த உறவுப்பாலம் மேலும் வலுவடைந்து கனேடியத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான  உறவு பொருளாதாரம், கல்வி, பண்பாடு என பன்முக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.