பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 மாணவர்கள் பலி.. கயானாவில் சோகம்!

 

கயானாவில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனுக்கு தெற்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொட்டாரோ-சிபருனி மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்க நகரமான மஹ்டியாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்று கிழமை (மே 21) இரவு சுமார் 11.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கயானா நாட்டின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், கட்டிடம் ஏற்கனவே முழுவதுமாக தீப்பிழம்புகளால் எரிந்து கிடப்பதைக் கண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துரித நடவடிக்கையில் களமிறங்கிய தீயணைப்பு சேவை வீரர்கள், சுமார் 20 மாணவர்களை உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். இருப்பினும், 14 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஐந்து பேர் மஹ்தியா மாவட்ட மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

மேலும், இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் 4 மாணவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கும் வகையில் தேசிய தீயணைப்பு சேவை அதிகாரிகள் சம்பவயிடத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, 5 குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் 10 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், அப்பகுதியை முழுமையாக ஆராய்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் முயற்சி தடைபட்டுள்ளது என கூறப்படுகிறது.