16 வயது பாலஸ்தீன சிறுவன் தாக்குதல்.. இஸ்ரேல் பெண் காவல் அதிகாரி மரணம்!

 

இஸ்ரேல் எல்லை காவல் படையை சேர்ந்த பெண் காவல் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7-ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 241-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசாமுனை மீது இஸ்ரேல் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 32வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஜெருசலேமின் பழைய நகர் அருகே உள்ள காவல் நிலையம் வெளியே, இஸ்ரேல் எல்லை காவல் படையை சேர்ந்த பெண் காவல் அதிகாரி எலிஷேவா ரோஸ் இடா லுபின் (வயது 20) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது, 16 வயது பாலஸ்தீனிய பயங்கரவாதி ஒருவர், திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தினார். அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த லுபின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில், லுபினுடன் பணியில் இருந்த மற்றொரு காவல் அதிகாரிக்கும் காயமேற்பட்டது.  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்த தாக்குதலில், பாலஸ்தீனியருக்கு உதவியாக செயல்பட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என இரு நாட்டு குடிமகளான லுபின், 2021-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்துள்ளார். இந்நிலையில், பாலஸ்தீன பயங்கரவாத தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டார். இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 59 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.