45 வயது பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு.. இந்தோனேஷியாவில் அதிர்ச்சி சம்பவம்

 

இந்தோனேஷியாவில் பெண் ஒருவரை 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இந்தோனேஷியாவில் உள்ள கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்தவர் பரிதா (45). இவர், கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது கணவரும், கிராம மக்களும் சேர்ந்து காணாமல் போன பெண்ணை அப்பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள பகுதி ஒன்றில் காணாமல் போன பெண்ணின் உடைமைகளை கண்டறிந்த கிராமத்தினர், தேடுதலை தீவிரப்படுத்தியபோது அப்பகுதியில் 5 மீட்டர் (16 அடி) நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்த போது அதனுள் பரிதா இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். உடனே, மலைப்பாம்பை முழுமையாகக் கிழித்து அதன் வயிற்றில் இருந்து பரிதாவின் உடலை அவர் அணிந்திருந்த உடையுடன் வெளியே எடுத்ததாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.