100-ல் 14 பேருக்கு உயிரிழப்பு ஏற்படலாம்.. மீண்டும் அச்சுறுத்தி வரும் கொரோனா.. இங்கிலாந்து மக்கள் பீதி!

 

இங்கிலாந்தில் புதிய கொரோனா வேரியன்ட் பாதிப்பால் நூறில் 14 பேருக்கு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.03 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அறிவியல் முறையில் இஜி. 5.1 என்று மருத்துவ வல்லுனர்கள் அழைக்கின்றனர். ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் வந்த வகைகளில் தற்போது பரவி வரும் எரிஸ் வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. முதன் முறையாக கடந்த மாதம் 3-ம் தேதி இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குறித்து மேலதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் சமீபத்தில் வெளிவந்த பர்பீ, ஓப்பன் ஹெய்மர் படங்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக தியேட்டர்களுக்கு சென்றனர். இதுவும் எரிஸ் வைரஸ் பரவுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வைரஸ் கடந்த மே மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சுட்டிக்  காட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த மே மாதம் இந்த எரிஸ் வைரஸ் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எரிஸ் வைரஸ் பாதிப்புக்கு கடந்த மாதம் 27-ம் தேதி நிலவரப்படி சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய கொரோனா வேரியன்ட் பாதிப்பால் 100-ல் 14 பேருக்கு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.