கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன் குத்திக்கொலை.. ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

 

ஸ்பெயினில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் மொசெஜோன் நகரில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது மேடியோ என்ற சிறுவன் முக்காடு போட்ட மனிதன் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உறவினர் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலில், இந்த கொலை குற்றத்திற்கு யார் பொறுப்பு என்று  தங்கள் குடும்பத்திற்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது மேடியோ உடன் விளையாடி கொண்டிருந்த போது இரண்டு சிறுவர்களால் உயிர் தப்பிக்க முடிந்தது, ஆனால் மேடியோ-வால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சம்பவ நடந்த ஏஞ்சல் டார்டியோ விளையாட்டு மையத்திற்கு அவசர மற்றும் மருத்துவ குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் விரைவாக வரவழைக்கப்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிறுவனை கத்தியால் குத்திய முக்காடு போட்ட நபர் வாகனத்தின் உதவியுடம் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து குற்றவாளியை ரகசியமாக கண்காணித்து கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுவனின் இழப்பை தொடர்ந்து அப்பகுதியில் 3 நாட்கள் துக்கம் பிரகடனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.