உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண்கள் உள்பட 11 பேர் பலி! சீனாவில் சோகம்!

 

சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் உடற்பயிற்சி கூடத்தில் கைப்பந்து விளையாடி கொண்டு இருந்த மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. பலியானவர்களில் பலர் குழந்தைகள் என நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மழைநீரை உறிஞ்சும் வகையில் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருளை கூரையின் மீது குவிக்கப்பட்டிருப்பது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இடிந்து விழுந்த உடற்பயிற்சி கூடத்தை கட்டிய உள்ளூர் கட்டிட நிறுவனத்தின் தலைவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் விபத்து ஏற்பட்ட பள்ளியை மாணவர்களின் பெற்றோர் சூழ்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.


இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் பெற்றோர் பேசுகையில், பள்ளி நிர்வாகம் எனது மகள் இறந்துவிட்டார் என்று மட்டுமே கூறியது, ஆனால் இதுவரை எனது மகளின் உடலை காண்பிக்கவில்லை. மேலும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் முகத்தில் இரத்தமாக இருந்ததாக பெற்றோர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.