நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 106 பேர் பலி.. திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சோகம்!!
நைஜீரியாவில் திருமணத்திற்கு சென்று திரும்பிய போது படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 106 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் நைஜா் மாகாணம், எக்போட்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அந்த திருமணத்துக்காக குவாரா மாகாணத்தில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு, நைஜா் நதி வழியாக படகு மூலம் திங்கள்கிழமை திரும்பிச் சென்றனர்.
வாகனங்களில் வந்தவா்கள் கூட, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மூழ்கியதால் அந்தப் படகில் ஏறி வந்தனர். அந்தப் படகில் அளவுக்கு அதிகமாக சுமார் 300 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், க்வாரா மாகாணம், படேகி மாவட்டம் வழியாக அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது அது இரண்டாக உடைந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து நீரில் தத்தளித்தவா்களை மீட்டனா். பின்னா் மீட்புக் குழுவினரும் அந்தப் பகுதிக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், இதுவரை சுமாா் 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் காணாமல் போன ஏராளமானவா்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை நிலவரப்படி, இந்த விபத்தில் 106 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் ஏராளமான சிறுவா்களும் அடங்குவர்.
நைஜீரியாவில், நீா் வழிப் போக்குவரத்துக்கு உள்ளூரில் தரமில்லாமல் தயாரிக்கப்படும் படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் அங்குள்ள தொலைதூரப் பகுதிகளில் படகு விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் அடிக்கடி நேரிட்டு வருகின்றன.