ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி.. திருமண விழாவிற்கு சென்று திரும்பிய போது சோகம்!!

 

ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழுந்த விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு சிட்னி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஹண்டர் வேலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 பேரை ஏற்றுக்கொண்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கிரேட்டா நகரில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாதையிலிருந்து விலகி புரண்டு பள்ளத்திற்குள் விழுந்ததால் இந்தப் விபத்து நடந்துள்ளதாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் கூறுகிறார்கள். பேருந்தில் சிறுவர்கள் யாரும் பயணம் செய்திருக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனிடையே, இன்று மாகாண முதல்வர் கிறிஸ் மின்ன்ஸ் கூறுகையில், தொடர்புடைய பேருந்து விபத்தில் சிக்கிய 21 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளார் எனவும், எஞ்சியவர்கள் அச்சப்படும் நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடங்கிய நாள் இன்று பலருக்கும் மிக மோசமாக நிறைவடைந்துள்ளது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.