பித்தப்பை அகற்ற வேண்டிய நேரத்தை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்.. கவனமாக இருங்கள்..!

 

பித்தக்கற்கள் உடலில் சேரும் கொழுப்பு மற்றும் உப்புகளின் காரணமாக பித்தப்பையில் உருவாகும். கல்லிரலுக்கு அடியில் பேரி வடிவில் அமைந்துள்ள உறுப்பே பித்தப்பை ஆகும். பித்தப்பையில் உள்ள பித்த நாளங்கள் பித்தத்தை கொண்டு செல்கிறது. உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நமது செரிமான அமைப்பு ஒரு திரவத்தை உற்பத்தி செய்கிறது. கல்லீரலில் இருந்து பித்தப்பை வரை இந்த திரவம் செல்கிறது.

ஆனால் பித்த நீரை சேமிக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இப்படி உருவாகும் கற்கள் கடுமையான வலியை உண்டாக்கலாம். ஒருவரது பித்தப்பையில் பிரச்சனைகள் இருநதால், அந்நபர் தொடர்ச்சியான மேல் வயிற்று வலி அல்லது செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

ஆனால் பித்தப்பை ஒரு மனிதன் உயிர் வாழ அவசியமானது அல்ல. எனவே தான் மருத்துவர்கள் பலரும் இந்த பித்தப்பையில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை அகற்ற பரிந்துரைக்கிறார்கள். இப்போது பித்தப்பையில் கற்கள் இருந்தால் அல்லது பித்தப்பையை அகற்ற வேண்டிய சூழல் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளைக் காண்போம்.

பித்தக்கற்கள் மற்றும் கோலிசிஸ்டிடிஸ்

பித்தக்கற்கள் என்பவை பித்தப்பையில் பித்தநீரின் தேக்கத்தால் உருவாகும் கற்களாகும். இந்த வகையான கற்கள் பெரிதாகவோ, சிறியதாகவோ அல்லது மண் போன்ற குருணை அளவிலோ இருக்கலாம். இந்த கற்கள் பித்த நாளங்களில் அடைப்புக்களை ஏற்படுத்தும் போது, அது கடுமையான வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி பித்தநீர் செல்லும் பித்த நாளங்களில் அடைப்புக்கள் ஏற்பட்டால், அது அப்படியே அந்த இடத்தில் தொற்று மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்துவார்கள்.

பித்தப்பை கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

அடிவயிற்று வலி

அடிவயிற்றின் மேல் வலதுபக்கத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலி ஏற்படும். இப்படியான அசௌகரியத்தை பிலியரி கோலிக் என்று அழைப்பர். அதன் பின் இந்த வலியானது மெதுவாக முதுகு அல்லது வலது தோள்பட்டைக்கு பரவும். அதுவும் இரவு உணவு அல்லது வயிறு நிறைய உணவு உண்ட பின் இப்படியான வலியை சந்திக்க நேரிடும். குறிப்பாக சில நிமிடங்கள் முதல் சில மணிநேரங்களை வரை இந்த வலி நீடித்திருக்கலாம்.

குமட்டல்

பித்தப்பையில் கற்கள் இருந்தால் சந்திக்கும் மற்றொரு அறிகுறி குமட்டல் மற்றும் வாந்தி. எப்போது ஒருவர் செரிமான செயல்பாட்டில் இடையூறுகளை அதிகம் சந்திக்கிறாரோ, அப்போது இப்படியான உணர்வை அதிகம் சந்திக்க நேரிடும்.

அஜீரண கோளாறு மற்றும் வயிற்று உப்புசம்

நாள்பட்ட அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்றவையும் பித்தக்கற்கள் இருப்பதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகளானது பித்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் உண்ட உணவில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை

பித்தக்கற்களானது பித்தநாளங்களை அடைந்துவிட்டால், சிறுகுடலுக்கு செல்லும் பித்தநீரின் ஓட்டம் தடைபட்டு, கல்லீரலுக்கு இந்நீர் திருப்பி அனுப்பட்டு, அதன் விளைவாக இரத்தத்தில் பித்தநீரின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கும்.

காய்ச்சல் மற்றும் குளிர்

அடிவயிற்று வலியுடன் ஒருவர் காய்ச்சல் மற்றும் குளிரை சந்தித்தால், அதை உடனே கவனித்து மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது கோலாங்கிடி எனப்படும் மிகவும் கடுமையான பித்தப்பை தொற்றுநோயினால் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரம்பகால அறிகுறிகள்

ஒருவரது பித்தப்பையில் பிரச்சனைகள் இருந்தால், ஆரம்பத்தில் பின்வரும் அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அவை:

* மேல் அடிவயிற்றின் வலது பக்கத்தில் கூர்மையான வலி

* மிதமான காய்ச்சல்

* குமட்டல் மற்றும் வாந்தி

* சருமம் மஞ்சள் நிறத்தில் தெரிவது

தீவிரமான பித்தப்பை பிரச்சனையின் அறிகுறிகள்

பித்தப்பையில் இருந்து பித்தநீர் வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், பித்தப்பை வீக்கமடையத் தொடங்கும். இப்படி வீங்கிய நிலையை கடுமையான கோலிசிஸ்டிடிஸ் (Acute Cholecystitis) என்று அழைப்பர். இந்த கடுமையான கோலிசிஸ்டிடிஸின் முக்கிய அறிகுறி வலது அடிவயிற்றில் திடீரென கூர்மையான வலி ஏற்பட்டு, அப்படியே வலது தோள்பட்டைக்கு பரவும். இது தவிர,

* வலது அடிவயிற்றின் மேல் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும்.

* ஆழமாக சுவாசிக்கும் போது வலி கடுமையாக இருக்கும்.

* சில மணிநேரங்கள் வரை தொடர்ச்சியாக வலியை சந்திக்க நேரிடும்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)