சுகர், கொலஸ்ட்ரால் குறைக்கும் மேஜிக் மசாலா.. என்ன தெரியுமா?

 

இந்த உலகத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது தேவை என்பதையும் தாண்டி அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் நமது சுற்றுசூழல் முழுவதும் நச்சுக்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்னும்போது உணவுமுறை, டயட், உடற்பயிற்சி என இவற்றில் கவனம் செலுத்தும்போது முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி மறந்து விடுகிறோம்.

மனிதர்களை தன்வசப்படுத்தும் நோய்களில் நீரிழிவு நோயும் அதிக கொலஸ்ட்ராலும் முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில் இவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகருத்து வருகின்றது. நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கப்படுகின்றது. மறுபுறம், கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அதனால், இன்னும் பல நோய்கள் நம்மை பற்றிக்கொள்கின்றன. ஆகையால், இவை இரண்டையும் கட்டுகுள் வைப்பது மிக அவசியமாகும். 

இந்த இரண்டு நோய்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. நீரிழிவு தமனிகளின் புறணியை சேதப்படுத்துகிறது. இதனால் அதில் கொலஸ்ட்ரால் திரட்சியின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. மேலும் இதன் காரணமாக இரத்த ஓட்டம் மோசமடையத் தொடங்குகிறது. பொதுவாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும், எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருப்பதற்கான காரணம் இதுதான். 

எனினும் சில இயற்கையான எளிய வழிகளில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தலாம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா அதற்கு போதுமானது. இந்த மாசாலா மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து கொழுப்பையும் குறைக்கலாம். இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் அதிக பயனுள்ளதாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. 

40 நாட்களில் குறைந்த இரத்த சர்க்கரை கொலஸ்ட்ரால் அளவுகள்

பிரிட்டனில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நடுத்தர வயதுடைய 60 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு 40 நாட்களுக்கு தினமும் 3-6 கிராம் இலவங்கப்பட்டை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களது இரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு 24% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களது கொலஸ்ட்ரால் அளவும் 18% குறைந்து காணப்பட்டது. இந்த 40 நாள் காலத்தில் அவர்கள் நீரிழிவு நோய் அல்லது கொலஸ்ட்ராலுக்கான வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நீரிழிவு நோயாளிகளின் இரத்த அழுத்தமும் சீரானது

தினமும் இலவங்கப்பட்டையை உட்கொண்டதால் இரண்டு வாரங்களுக்குள் ப்ரீடியாபெட்டிக் நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்த அளவுகள் குறைந்ததாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இலவங்கப்பட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? 

ஒரு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்விலும் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கிராம் இலவங்கப்பட்டையை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் என்றும், டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க இது உதவும் என்றும் இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

நீரிழு நோய், உயர் கொலஸ்ட்ரால் தவிர இன்னும் பல பிரச்சனைகளில் இலவங்கப்பட்டை உதவியாக இருக்கிறது.

  • PCOS எனப்படும் மாத விடாய் பிரச்சனை உள்ள பெண்கள் இலவங்கப்பட்டையை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். 
  • மூளை செயல்பாட்டை அதிகரிக்க தினமும் இலவங்கப்பட்டை நீரை குடிக்கலாம். இலவங்கப்பட்டை நமது செறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலை வலுப்படுத்த உதவுகிறது. 
  • செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் இலவங்கப்பட்டையில் உள்ளன.  தினமும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடித்தால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் குணமாகும்.
  • இலவங்கப்பட்டையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.