கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி? இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க..!

 

கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.

மனித உடலில் சேரும் கொழுப்பு என்பது ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை சிறிது சிறிதாக ஏற்படுத்தி இறுதியில் நமது உயிருக்கே உலை வைத்து விடும். இதன் காரணமாகவே நமது இதயத்தை பாதுகாப்பதற்காகவும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும் சீரான கால இடைவெளியில் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு இருக்க வேண்டிய அளவை விட மிகவும் அதிகரிக்கும் போது அதனை நாம் ஹை கொலஸ்ட்ரால் என்று அழைக்கிறோம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் இது காணப்படுகிறது. ஹார்மோன்கள், வைட்டமின் டி ஆகியவற்றிற்கும், உணவு செரிமானம் ஆவதற்கும் கூட இவை முக்கியம். ஆனால் கொலஸ்ட்ராலின் அளவு சாதாரண அளவைவிட அதிகரிக்கும் போது அது பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் குறிப்பாக உடலில் கொழுப்பு அதிகரித்தால் அதனால் இதய நோய்கள், மாரடைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

நமது உடலில் ரத்தத்தின் வழியாக இரண்டு விதமான கொழுப்பு புரதங்கள் கடத்தப்படுகின்றன. இவற்றை லோ டென்சிட்டி ப்ரோட்டீன் (LDL) மற்றும் ஹை டென்சிட்டி ப்ரோட்டீன் (HDL) என அழைப்பார்கள். பொதுவாகவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்றாலே உடலுக்கு கெடுதல் தரும் கொழுப்பு என்று கூறுகிறோம். ஏனெனில் இவை இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதுவே HDL கொலஸ்ட்ரால் என்பது நன்மை தரும் கொழுப்பு என வகைப்படுத்தப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள கெடுதல் செய்யும் கொழுப்பை நீக்குகிறது.

குறிப்பாக ஹை கொலஸ்ட்ரால் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. நீங்கள் இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் மட்டுமே அதனை கண்டறிய முடியும். மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. மரபணு காரணங்களினால் ஏற்படுவது, நம்முடைய உணவு கட்டுப்பாடு, குறைவான உடல் இயக்கங்கள், உடல் பருமன், புகைப்பிடித்தல் போன்ற பல்வேறு காரணிகள் கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாக இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்வதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

விரதம்:

பெரும்பாலான நேரங்களில் நீங்கள் கொலஸ்ட்ரால் சோதனைக்கு செல்லும் போது மருத்துவர் சோதனை செய்வதற்கு 10 லிருந்து 12 மணி நேரங்கள் முன்னதாக எதுவும் சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்துவார். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு எந்த விதமான உணவுப் பொருட்களும் அல்லது பானங்களும் அருந்தக்கூடாது. ஏனெனில் அவ்வாறு பரிசோதனை செய்வதற்கு முன்பே உணவு அருந்தினால் அவை ட்ரைகிளிசரின் மற்றும் எல்டிஎல் அளவை அதிகரித்து காண்பிக்க கூடும். இதன் காரணமாக கிடைக்கும் தரவுகள் தவறாக இருக்க வாய்ப்புண்டு.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்:

கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் கூட பரிசோதனை நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மது அருந்துவதை நிறுத்தி விட வேண்டும். அப்போதுதான் சோதனையில் சரியான முடிவுகள் கிடைக்கும்.

தேவையான அளவு நீர் அருந்துதல்:

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைவது கூட பரிசோதனையில் கிடைக்கும் தரவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்:

மன அழுத்தமானது கண்டிப்பாக கொலஸ்ட்ரால் சோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தும். முடிந்த அளவு சோதனை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே நம்மை ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக வைத்துக் கொள்வது சோதனை முடிவுகளில் துல்லியமாக இருக்க உதவும்.

கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்:

மேலே கூறியவற்றில் இது மிகவும் முக்கியமானதாகும். முடிந்த அளவு ஜங்க் ஃபுட்ஸ், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவையும் பரிசோதனை முடிவுகளில் மாற்றத்தை கொடுக்க கூடும்.