மாரடைப்பு ஏற்படக்கூடாதா..? காலையில இந்த 5 நட்ஸ்களை ஊற வெச்சு சாப்பிடுங்க...

 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான காரணியாகும். இந்த கொலஸ்ட்ராலை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்து வந்தாலே, மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.

ஆனால் தற்போது ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் நிறைந்த ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் இருப்பதால், அப்படியான உணவுகளை அதிகம் சாப்பிட நேரிடுகிறது. இதன் விளைவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது என்பது சற்று கடினமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், மாரடைப்பு வரக்கூடாதெனில் உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

அதுவும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஒருசில உணவுகளின் மூலமே குறைக்கலாம். ஆய்வுகளில் கூட குறிப்பிட்ட நட்ஸ்களை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் இயற்கையாகவே குறைவதாக தெரிய வந்துள்ளது. இப்போது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்த வகையான நட்ஸ்களை ஒருவர் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம்.

பாதாம் 

நட்ஸ்களிலேயே பாதாமில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர இந்த நட்ஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் இதயம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அதற்கு பாதாமை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, 5-6 பாதாமை இரவு தூங்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இப்படி உட்கொள்வதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ போன்றவை கிடைத்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

வால்நட்ஸ் 

வால்நட்ஸில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. அதுவும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதற்கு 3 வால்நட்ஸை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரியும்.

பிஸ்தா 

நட்ஸ்களில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றொரு நட்ஸ் தான் பிஸ்தா. பிஸ்தாவில் பைட்டோஸ்டெரால்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற கெட்ட கொலட்ஸட்ராலைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளள. அதற்கு பிஸ்தாவை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.

முந்திரி 

நட்ஸ்களில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய நட்ஸ் தான் முந்திரி. இந்த முந்திரியை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, நீரில் ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், தாவர வகை ஸ்டெரால்கள் போன்றவை கிடைத்து, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். அதோடு, இதில் மக்னீசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள செலினியம் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அழற்சியைக் குறைத்து, இதய நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பிரேசில் நட்ஸை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே குறைக்கலாம்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)