உங்க இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமா..? இந்த உணவுகளை அடிக்கடி உண்ணுங்கள்..!

 

தற்போது இதய ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் இதய நோயால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் போது ஒவ்வொருவருக்குமே மனதில் ஒருவிதம் பயம் எழுகிறது. பொதுவாக இதய நோயானது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு வரலாம். அதில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மிகவும் முக்கியமான காரணங்களாகும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முதலில் ஒருவர் தங்களின் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும்.

முக்கியமாக சிவப்பு நிற உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சாப்பிட வேண்டிய சிவப்பு நிற உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

தக்காளி: 

நமது தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு முக்கியமான காய்கறி தான் தக்காளி. இந்த தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகம் உள்ளன. அதோடு இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லைகோபைன் மற்றும் பொட்டாசியமும் உள்ளன. குறிப்பாக தக்காளியில் உள்ள கரோட்டினாய்டுகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

பீட்ரூட்: 

வேர் காய்கறியான பீட்ரூட் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவி புரியும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த பீட்ரூட்டில் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு, இதயத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.

சிவப்பு குடைமிளகாய்: 

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. அதுவும் சிவப்பு நிற குடைமிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகளவில் உள்ளன. அதோடு இதில் நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்களான பீட்டா கரோட்டீன், பீட்டா க்ரிப்டோஜாந்தின், லைகோபைன் போன்றவையும் உள்ளன. இவை இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே இந்த சிவப்பு குடைமிளகாயை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி: 

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் நல்ல மணத்தையும், சுவையையும் கொண்டதோடு, இவற்றில் ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் உள்ள ஃபோலேட் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே இதய ஆரோக்கியம் மேம்பட நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரியை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

கிரான்பெர்ரி:

மிகச்சிறிய கிரான் பெர்ரி பழங்களில் ப்ரோஅந்தோசையனிடின்கள் உள்ளன. இவை சிறுநீரக பாதையில் தங்கியுள்ள பாக்ரியாக்கள் முன்னேறி மேலே வருவதைத் தடுக்க உதவுகின்றன. இந்த வகையான பாக்டீரியாக்கள் வயிற்றல் புண்களை ஏற்பட காரணமானவையாகும். எனவே கிரான் பெர்ரி பழங்களை உட்கொள்வதன் மூலம், புற்றுநோயின் அபாயம் குறைப்பதோடு, இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

ராஸ்ப்பெர்ரி:

ராஸ்ப்பெர்ரியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் ஏற்பட்டுள்ள வீக்கம், வலியைக் குறைப்பதோடு, சர்க்கரைநோய், புற்றுநோய் மற்றும் அழற்சியையும் குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த ராஸ்ப்பெர்ரி பழங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

செர்ரி:

செர்ரி பழங்களில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை அதிகளவில் உள்.ன மேலும் இந்த பழங்களில் மெலடோனின் கணிசமான அளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் தூக்க முறையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டாலே, உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தூக்கம் சரியாக கிடைக்காமல் போனால், அதன் விளைவாகவே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முக்கியமாக இதய நோயின் அபாயம் அதிகரிக்கும். எனவே இதய ஆரோக்கியம் மேம்பட செர்ரி பழங்களை சாப்பிட்டு வாருங்கள்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)