கொடைக்கானல் சென்று இலவசமாக சுற்றி பார்க்க வேண்டுமென ஆசையா.. நாளை ஒருநாளுக்கு வனத்துறை தந்த சூப்பர் சான்ஸ்

 

இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமான இடம் கொடைக்கானலுக்கு உண்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைக்கு மேல் அமைந்துள்ள கொடைக்கானல் நகரில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன.

கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டுவில் இருந்து மலையில் ஏறும் போதே ரம்மியமாக இருக்கும். மஞ்சளாறு அணை தோற்றம் முதல், எலிவால் அருவி, வெள்ளி நீ வீழ்ச்சி வரை கொடைக்கானலுக்கு வரும்போது ஏராளமான இடங்கள் இருக்கும். கொடைக்கானல் நகருக்குள் நட்சத்திர ஏரி, மியூசியம், சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, பூங்கா, கோக்கர்ஸ் வால்க், குறிஞ்சி ஆண்டவர் கோவில், செட்டியார் பார்க், வட்டகானல் அருவி என ஏராளமான விஷயங்கள் உள்ளன. கொடைக்கானல் நகருக்குள் திரும்பிய பக்கம் எல்லாம் ஏராளமான சுற்றுலா தளங்களும் இருக்கின்றன.

கொடைக்கானல் நகருக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் ஏராளமான மக்கள் சுற்றுப்பயணம் வருகிறார்கள். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வாழ்க்கை முறையும் கடினமாக மாறிவிட்டதால் பலரும் இயற்கையோடு வாழ விரும்புகிறார்கள். அதற்காக தமிழ்நாட்டில் அதிகம் பேர் விரும்பும் சுற்றுலாதளங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருக்கிறது.

கொடைக்கானலுக்கு வரும் மக்கள், பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல கட்டணங்கள் செலுத்த வேண்டியதிருக்கும். இந்நிலையில் கொடைக்கானலில் குடியரசு தினத்தை முன்னிட்டு வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தளங்களிலும் கட்டணம் வசூல் செய்ய மாட்டாது. அனைவருக்கும் கட்டணமில்லாமல் சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுச் செல்லலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாளை குடியரசு தினம் என்பதால் கொடைக்கானலுக்கு பலரும் சுற்றுலா வருவார்கள் என்பதால், வனத்துறையின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் நகரம் களைகட்ட போகிறது. அதேநேரம் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.