கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்.. தினமும் குடிக்கலாமா.. அதனால் ஏற்படும் நன்மை தீமை என்ன?

 

மக்களிடையே கிரீன் டீ மிகவும் பிரபலமைந்து வருகிறது. தங்கள் உடல் எடையை குறைக்கவும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை பெறவும் கிரீன் டீயை அருந்துகிறார்கள். கிரீன் டீ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. பல ஆய்வுகளின் படி, கிரீன் டீ உயர் இரத்த அழுத்தம் முதல் இதய செயலிழப்பு வரை இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறதாக கூறப்படுகிறது. இது இதயத்திற்கு நல்லது பொதுவாக மூளைக்கு நல்லது; உங்கள் மூளைக்கும் ஆரோக்கியமான இரத்த நாளங்கள் தேவை.

எனினும் தினமும் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லதா இல்லையா என்ற கேள்வி பலர் மனதில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. கூடுதலாக ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது என்ற கேள்வியும் சிலர் மனதில் இருக்கலாம். அதிகப்படியான கிரீன் டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன என்பது ஒரு சிலர் மனதில் கேள்வியாக உள்ளது. இது போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள்:

வீக்கத்தை குறைக்கிறது:

ஏதேனும் காயம் மற்றும் தொற்று ஏற்படும் சமயத்தில் நமது உடல் வெளிப்படுத்தும் இயற்கையான எதிர்வினை தான் வீக்கம். குறுகிய கால வீக்கம் நமது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாக கருதப்பட்டாலும் நாள்பட்ட வீக்கம் இதய நோய், அதிக ரத்த அழுத்தம், டயாபடீஸ் மற்றும் புற்றுநோய் போன்ற ஒரு சில மோசமான உடல் நல கோளாறுகளுக்கு வழி வகுக்கலாம். அதிர்ஷ்டவசமாக வெதுவெதுப்பான கிரீன் டீ குடிப்பது வீக்கத்தை குறைப்பதற்கு உதவும். கிரீன் டீயில் ஆண்டி ஆக்சிடன்ட் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடும் பண்புகள் காணப்படுகிறது.

ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை மேம்படுத்துகிறது: ஆரோக்கியமான கொலஸ்ட்ராலுக்கு ஆதரவு தருவதன் மூலமாக கிரீன் டீ இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ குடிப்பது ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் கிரீன் டீ பருகுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று காட்டுகிறது

மூளையின் செயல்பாட்டிற்கு ஆதரவு அளிக்கிறது:

இதயத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுடன் சேர்த்து கிரீன் டீ குடிப்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. கிரீன் டீயில் காணப்படும் L-theanine என்ற அமினோ அமிலம் நினைவகத்தை மேம்படுத்தி, பதட்டத்தை குறைப்பதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது: செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை கிரீன் டீ பருவதன் மூலம் தவிர்க்கலாம்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது: கிரீன் டீயில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் குறிப்பாக பாலிபீனால்கள் ஆக்ஸிடேடிவ் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாப்பதன் மூலமாக நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் அல்லது செல்களை இறக்கச் செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதை பாலிபீனால்கள் தடுக்கிறது. வழக்கமாக கிரீன் டீ பருகும் பழக்கம் கொண்டவர்களில் கிரீன் டீ பருகாதவர்களுக்கு காட்டிலும் மார்பக புற்றுநோய் உருவாகும் அபாயம் 17% குறைந்திருப்பதாக 2019 ஆம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள்: 

இரும்பு சத்து குறைபாடு: 

கிரீன் டீயை இயற்கையான வடிவத்தில் பருகுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்தாலும் அதனை இனிப்பூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள் காரணமாக ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். மேலும் அதிகப்படியான கிரீன் டீ பருகுவதாலும் சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

உதாரணமாக அதிக அளவு கிரீன் டீ குடிப்பது அதில் இருக்கக்கூடிய டானின்கள் காரணமாக இரும்பு சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். ஏனெனில் டானின்கள் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. பலர் உணவு சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காக ஒரு கப் வெதுவெதுப்பான கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருகிறார்கள். ஆனால் இது முற்றிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ பருக வேண்டும்?

கிரீன் டீயிலும் காஃபைன் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே பிற காஃபைன் கலந்த பானங்களை பருகுவது போலவே கிரீன் டீ பருகுவதால் பதட்டம், சோர்வு, தலைவலி, குமட்டல், தூங்குவதில் சிக்கல் இதய படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.