திருமணமான 45 நாளில் இளம்பெண் தற்கொலை.. கதறி அழுத கணவன்.. கன்னியாகுமரியில் சோகம்!

 

கன்னியாகுமரியில் திருமணமாகி 45 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமிர மாவட்டம் கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் கன்னியாகுமரி நகரை ஒட்டிய கொட்டாரத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஓட்டல் அதிபரான இவருக்கு கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த பாண்டு மகள் காயத்ரி (32) என்பவருடன் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோவிலில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் இனிதே திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் நேற்று முன்தினம் அதாவது கடந்த செவ்வாய்கிழமை இரவு காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒரு அறைக்குள் சென்றுள்ளார். அங்கு திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். உடடினயாக அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 45 நாளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது உடனடியாக தெரியவில்லை. பிறகு அவர் தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.

தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கி இருப்பதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான சில வாரங்களிலேயே புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.