பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரியில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் பெண் சடலம் கண்டு எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ், இவரது மனைவி செல்வி (57). இந்த தம்பதிக்கு ஸ்டாலின் தாஸ் என்ற மகனும் ஷைனி என்ற மகளும் உள்ளனர். செல்வி கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலுடன் காணபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென அருகில் உள்ள தோப்பில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் செல்வி பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கபட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது.
செல்வி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த பகுதியில் இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில்கள் கிடந்ததால் இது கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.